தேசியத் தேர்வுப் பயிற்சி (நேஷனல் டெஸ்ட் அபியாஸ்) என்னும் புதிய கைபேசி செயலியை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர், திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார். தேசியத் தேர்வு முகமையின் ஆளுகையின் கீழுள்ள, வரவிருக்கும் JEE மெயின் மற்றும் NEET போன்ற தேர்வுகளில் கலந்து கொள்வோர் மாதிரித் தேர்வுகளை எழுத வசதியாக தேசியத் தேர்வு முகமையால் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டது. தொடர் பொது முடக்கத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களும், தேசியத் தேர்வு முகமையின் தேர்வு-பயிற்சி நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் காரணத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய வேண்டிய தேவை இருப்பதால், தேர்வுகளில் பங்கு பெறுவோர் தங்கள் வீடுகளில் இருந்தே பாதுகாப்பாகவும், வசதியாகவும் உயர்தர மாதிரித் தேர்வுகளை எழுத இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தி இருக்கும் இந்த வரலாறு காணாத காலத்தை நாம் எதிர்கொண்டிருக்கும் அதே சமயத்தில், தேர்வுத் தயாரிப்பு என்னும் மற்றுமொரு முக்கிய விஷயத்தில் கிட்டத்தட்ட இயல்பு நிலையை மாணவர்களுக்கான இந்த வசதியின் மூலம் மீட்டெடுத்து இந்தியா வழியைக் காட்டியுள்ளது.
JEE, NEET மற்றும் வரவிருக்கும் இதர போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை முழுவதும் தயார்படுத்திக் கொள்ள, நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் இந்தச் செயலியின் மூலம் உயர்தர மாதிரித் தேர்வுகளை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். தேர்வுகளை சுலபமாகப் பதிவிறக்கம் செய்து கொண்டு, அவற்றை இணையத் தொடர்பு இல்லாதபோதும் எழுதி, இணையத்துக்கான செலவையும் மிச்சப்படுத்தலாம்.
செயலியைத் தொடங்கி வைத்துப் பேசிய மனித வள மேம்பாடு அமைச்சர், “கல்வி நிறுவனங்களும், தேசியத் தேர்வு முகமையின் தேர்வு-பயிற்சி நிலையங்களும் கொவிட்-19 பொது முடக்கத்தின் காரணமாக மூடப்பட்டிருக்கும் காரணத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய வேண்டியதிருப்பதால், எந்த ஒரு மாணவரும் தேர்வுப் பயிற்சியில் இருந்து பின்தங்கிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக சரியான நேரத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது,” என்றார்.