திருப்பத்தூர் மாவட்டம் மல்லகுண்டா ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் குடிநீருக்காக தினம் தினம் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் முடிந்தவரை டிராக்டர் மூலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இது சற்று ஆறுதலான விஷயம். இந்த ஊராட்சியில் மொத்தம் பத்தாயிரத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை உள்ளது. இதனால் வறட்சி காலங்களில் இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக அங்கும் இங்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. எனவே கடந்த ஆண்டு நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்று பேசிய பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் திரு கே.சி.வீரமணி அவர்கள் எனக்கு தலையாய கடமை ஒன்று உள்ளது. அது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீரை மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு வந்து மக்களின் தாகம் தீர்ப்பதுதான் என்றார். ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மாவட்டம் மற்றும் நாட்றம்பள்ளி தாலுக்கா பிரிப்பு போன்றவற்றை வெற்றிகரமாக பெற்றுத் தந்துள்ளார். இதனால் இவரை இப்பகுதி மக்கள் மண்ணின் மைந்தன் என அழைக்கத் தொடங்கி விட்டனர். எனவே ஒகேனக்கள் கூட்டுக் குடிநீரை மல்லகுண்டா பகுதிவரை கொண்டு வந்து சேர்த்து இப்பகுதி மக்களின் தாகம் தீர்ப்பாரா என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
-S.மோகன், திருப்பத்தூர்